ஐபிஎல் 2023: விதிமுறைகளை மீறியதாக விராட் கோலிக்கு அபராதம்!
இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி களத்தில் ஆக்ரோஷத்துடன் இயங்குபவர். அண்மைக் காலமாக மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணிக்கு எதிராக ஃபீல்ட் செய்த போது 27 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் சென்னை வீரர் ஷிவம் துபே.
அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது சிராஜ் பிடித்திருந்தார். அதை கோலி மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடி தீர்த்தார். இந்நிலையில் ஐபிஎல் நெறிமுறை விதிகளை மீறியதாக விராட் கோலி போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் தனது அறிக்கையில், “பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தப் போட்டியில் 228 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்களை மட்டுமே எடுத்து, 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.