ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்தார் ‘கிங்’ கோலி; குஜராத்தை தடுக்குமா ஆர்சிபி?

Updated: Sun, May 21 2023 22:19 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் குஜராத் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆர்சிபி அணி இப்போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொண்டது. 

அதன்படி பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. இதையடுத்து ஆர்சிபி அணிக்கு வழக்கம் போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ்  - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இன்னிங்ஸின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.

பின் 28 ரன்களை எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி என 11 ரன்களை மட்டுமே எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதனைத்தொடர்ந்து வந்த மஹிபால் லாம்ரோர் ஒரு ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 26 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

ஒருபக்கம் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தாலும் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 60 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்த அவர், ஐபிஎல் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் சாதனையையும் படைத்து அசத்தினார். 

இறுதியில் அனுஜ் ராவத்தும் தனது பங்கிற்கு 23 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 13 பவுண்டரி, ஒரு சிக்சர் என 101 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை