டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி இன்று 62 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 12 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் கிளாசென் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஹைதராபாத் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை அடுத்து களம் இறங்கிய விராட் கோலி தன் மீது ஸ்டிரைக் ரேட் தொடர்பாக எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு இன்று தனது பேட்டால் பதில் அளித்தார்.
எப்போதும் அரைச்சதம் அடித்து ஆட்டம் இழக்கிறார் என அனைவரும் விமர்சித்த நிலையில், தற்போது தொடர்ந்து அதிரடியாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் விராட் கோலி பல சாதனைகளை இன்று படைத்திருக்கிறார் .அது என்னவென்று தற்போது பார்க்கலாம். ஆர் சி பி அணிக்காக 7500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி படைத்திருக்கிறார்.
இதேபோன்று ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு சீசனில் 500 ரன்களை விராட் கோலி பூர்த்தி செய்து இருக்கிறார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஆறு முறை விராட் கோலி 500 ரன்கள் என்ற மைல் கல்லை கடந்திருக்கிறார். இதேபோன்று டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை விராட் கோலி முறியடித்திருக்கிறார். இதுவரை விராட் கோலி டி 20 கிரிக்கெட்டில் ஏழு சதம் அடித்திருக்கிறார்.
மேலும், ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறார். கிறிஸ் கெயில் ஆறு சதத்துடன் இருந்த நிலையில் தற்போது விராட் கோலியின் ஆறு சதத்தை பதிவு செய்திருக்கிறார். இதை போன்று டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் விராட் கோலிக்கு கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.