ரஸலை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் இந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்படவில்லை. கடந்த சீசனும் அவருக்கு இந்த பிரச்சனை இருந்தது. இந்த சீசன் கூடுதலாக அடிக்கடி காயம் அடைந்து விடுகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது முதல் ஓவரை வீசிய பிறகு காலில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். பின்னர் சரிசெய்துகொண்டு வந்து இரண்டாவது ஓவர் வீசிவிட்டு மீண்டும் காலில் பிரச்சினை ஏற்பட்டு வெளியேறினார்.
இவ்வாறாக இரண்டு மூன்று முறை அவருக்கு நடந்தது. பேட்டிங்கிலும் இதன் காரணமாக ரஸல் சரியாக செயல்படவில்லை. 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே அடித்து முக்கியமான கட்டத்தில் மயங்க் மார்க்கண்டே பந்தில் அவுட் ஆனார். இந்நிலையில் ரசல் உடல்நிலை குறித்து 2018ஆம் ஆண்டே அவரிடம் அறிவுரை கூறியதாகவும், அவரது பேட்டிங் வரிசையை மாற்றி இறங்கினால் இன்னும் அதிக ரன்கள் அடிக்கலாம் என்றும் ரஸலிடம் பேசியதை சேவாக் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் 2018ஆம் ஆண்டு ரஸல் உடல்நிலையில் சற்று பிரச்சினைகள் இருப்பதை கண்டு அவரிடம் சில அறிவுரைகளை கூறினேன். மிடில் ஆர்டரில் களமிறங்கும்போது ரன்கள் ஓட வேண்டும். அப்போது உடல்நிலை ஒத்துழைக்காது. ஆகையால் ஓப்பனிங் இறங்கினால் அடிக்கடி ரன்கள் ஓட வேண்டிய அவசியம் இருக்காது. அவருக்கு இருக்கும் பலத்திற்கு நிறைய பவுண்டரிகளுக்கு பதில் சிக்ஸர் அடிக்கலாம். நிறைய இடங்கள் கிடைக்கும் என்று அறிவுறுத்தினேன்.
கரீபியன் பிரிமியர் லீகில் ஓபனிங் இறங்கி சதம் அடித்தார் ரஸல். அங்கு ரஸல் தான் கேப்டன். ஆகையால் தைரியமாக அந்த முடிவை எடுக்க முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வேறொருவர் கேப்டன். அணியின் திட்டமும் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் அணி நிர்வாகம் முடிவு செய்து ரசலை ஒப்பனிங் இறக்கினால் கூடுதல் ரன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் சுனில் நரேன் ஓபனிங் இறங்கி நிறைய ரன்களை அடித்தும் கொடுத்திருக்கிறார். அதுபோல ரஸல் வைத்து ரிஸ்க் எடுக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.