ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸின் பேட்டிங் பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமனம்!

Updated: Thu, Nov 17 2022 13:47 IST
Image Source: Google

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் டி20 தொடரின் 16ஆவது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடைகாலத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கொச்சி நகரில் நடைபெறும் நிலையில் கோப்பையை வெல்வதற்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ள அந்தந்த அணி நிர்வாகங்கள் தேவையற்ற வீரர்களை வெளியேற்றியுள்ளது. 

அந்த வரிசையில் 2008 முதல் இப்போது வரை முதல் கோப்பை வெல்ல போராடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த வருடம் புதிய கேப்டனாக நியமித்த மயங் அகர்வாலை சுமாராக செயல்பட்டதால் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாமல் அணியிலிருந்தே மொத்தமாக கழற்றி விட்டுள்ளது.

இப்படி அதிரடி மாற்றங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் சொதப்பலை அரங்கேற்றி வரும் அந்த அணி அடுத்த வருடம் கோப்பையை வெல்வதற்காக கேப்டனை மட்டுமல்லாமல் பயிற்சியாளர் குழுவையும் அடியோடு மாற்றியுள்ளது. ஏனெனில் புதிய கேப்டனாக சீனியர் வீரர் ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு உறுதுணையாக ஏற்கனவே தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கு பதிலாக டிராவிஸ் பெய்லிஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதுபோக துணை பயிற்சியாளராக ப்ராட் ஹார்டின், பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்வெல்ட் ஆகியோரை நியமித்துள்ள அந்த அணி பேட்டிங் பயிற்சிளாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிம் ஜாஃபரை அறிவித்துள்ளது. இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் 10000க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து ஜாம்பவானுக்கு நிகராக போற்றும் அளவுக்கு அனுபவத்தைக் கொண்டுள்ள வாஷிம் ஜாபர் ஏற்கனவே பஞ்சாப் அணியில் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 

ஆனால் இந்த வருடம் அப்பதவியிலிருந்து வெளியேறி உள்ளூர் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அவரை மீண்டும் பஞ்சாப் அணி நிர்வாகம் பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளதன் பின்னணி என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. முன்னதாக கேப்டன், பயிற்சியளர் போன்ற முக்கிய புள்ளிகளை விடுவித்துள்ள பஞ்சாப் அணி நிர்வாகம் ஓடீன் ஸ்மித், சந்தீப் சர்மா போன்ற தேவையற்ற வீரர்களையும் ஏலத்திற்கு முன்பாக விடுவித்துள்ளது.

அதன் காரணமாக தற்போது அந்த அணியில் அதிகபட்சமாக 9 வீரர்களுக்கான இடம் காலியாக உள்ளது. அதில் அந்த அணியால் அதிகபட்சமாக 3 வெளிநாட்டு வீரர்களை வாங்க முடியும். இதை தொடர்ந்து வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் மினி ஏலத்தில் 32.20 கோடிகள் என்ற பெரிய தொகையுடன் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்குவதற்கு பஞ்சாப் அணி தயாராகி வருகிறது. அப்படி யார் மீதும் கரிசனம் காட்டாமல் புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என புதிய பாதையில் நடக்கும் பஞ்சாப் அடுத்த வருடமாவது சிறப்பாக செயல்பட்டு முதல் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை