மீண்டும் வலிமையாக திரும்புவோம் - விராட் கோலி!

Updated: Tue, May 23 2023 19:41 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸை இழந்து  முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் விராட் கோலி 61 பந்துகளில் 13 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 101 ரன்களை குவித்து அசத்தினார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 197/5 ரன்களை குவித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஓபனர் ஷுப்மன் கில் 104 ரன்களையும், விஜய் சங்கர் 53 ரன்களையும் என இருவரும் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அசத்தினார்கள். மேலும், ஆர்சிபி அணி எக்ஸ்ட்ராவாக 19 ரன்களை விட்டுக்கொடுத்தது. இதனால், குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 198 ரன்களை குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இப்போட்டியில்  கடைசி வரை போராடிய பெங்களூர் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்றதால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இதன்மூலம், ஐபிஎல் கோப்பை வாங்கும் பெங்களூர் அணியின் கனவு மீண்டும் தகர்ந்தது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி சொல்லி விராட் கோலி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “அருமையான தருணங்களை கொண்ட தொடராக அமைந்தாலும், இலக்கை அடைய முடியவில்லை. இது ஏமாற்றமாக அமைந்தாலும், தலைநிமிர்ந்து மீண்டும் பயணிப்போம். அனைத்து முயற்சிகளிலும் எங்களுக்கு துணையாக நின்ற விசுவாசமான ரசிகர்களுக்கு நன்றி. பயிற்சியாளர்கள், அணி நிர்வாகம் மற்றும் எனது அணியின் வீரர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. மீண்டும் வலிமையாக திரும்புவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

அதிகம் பார்க்கப்பட்டவை