ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்!

Updated: Sun, Mar 31 2024 19:36 IST
ஐபிஎல் 2024: சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர் அதிரடியில் ஹைதராபாத்தை வீழ்த்தியது குஜராத்! (Image Source: Google)

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பந்துவீச அழைத்தார். 

இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - மயங்க் அகர்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மயங்க் அகர்வால் 16 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டிராவிஸ் ஹெண்ட்டும் 19 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே அதிரடி காட்டிய நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த ஐடன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர்.

இதில் வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய நிலையில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 24 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரமும் 17 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவிடம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் இணைந்த ஷபாஸ் அஹ்மத் மற்றும் அப்துல் சமத் இணை முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர்.

இறுதியில் அதிரடி காட்டிய ஷபாஸ் அஹ்மத் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார்.  இதனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிலும் 20 ஆவது ஓவரில் மூன்று ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தார். இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில்லும் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் இப்போட்டியில் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த டேவிட் மில்லர் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 45 ரன்களைச் சேர்த்ததுடன் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். அவருடன் இணைந்து விளையாடிவந்த விஜய் சங்கரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரிகள் உள்பட 14 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ஐபிஎல் புள்ளிப்பட்டியலிலும் நான்காம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை