இந்த தோல்வியானது ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது - ஷுப்மன் கில்!

Updated: Sun, May 25 2025 22:56 IST
Image Source: Google

அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

மேலும் இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தங்களுடைய கடைசி லீக் போட்டியில் வெற்றிபெற்ற ஆறுதலுடன் தொடரை முடித்துள்ளது. மேலும் இப்போட்டியில் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இந்நிலையில், சிஎஸ்கேவுடனான இந்த தோல்வியானது ஜீரணிக்க மிகவும் கடினமாக உள்ளது என குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஷுப்மன் கில், “இப்போட்டியின் பவர்பிளே ஓவர்களிலேயே ஆட்டம் எங்களிடமிருந்து கிட்டத்தட்ட விலகிச் சென்றுவிட்டது என்று நினைக்கிறேன், நாங்கள் உண்மையில் ஒருபோதும் திரும்பி வரவில்லை. 230 ரன்களைத் துரத்துவது எப்போதும் ஒரு தந்திரமான இலக்கு. ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அணிகளில் இழக்க எதுவும் இல்லை என்பதால் அவர்கள் முழு வீச்சில் செயல்படுகிறார்கள். ஆனால் நாங்கள் அழுத்தத்தின் கீழ் சிறப்பாக செயல்பட முடியவில்லை. 

மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். நீங்கள் அதைச் செய்யப் போவதில்லை என்றால் அது சவாலானதாக இருக்கும். கடந்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அதில் தான் சொதப்பிவுள்ளோம். இந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது. பிரகாசமான பக்கம் என்னவென்றால், எங்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆட்டங்கள் மீதமுள்ளன, எனவே சிறுவர்கள் மொஹாலியில் விளையாட உந்துதல் பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 57 ரன்களைச் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களைக் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Also Read: LIVE Cricket Score

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 41 ரன்களையும், ஆர்ஷத் கான் 20 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் அந்த அணி 147 ரன்களில் ஆல் அவுட்டானது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத், அன்ஷுல் கம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சிஎஸ்கே அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் நிறைவுசெய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை