ஐபிஎல் 2024: அபிஷேக், கிளாசென் அதிரடியில் பஞ்சாப்பை வீழ்த்தியது ஹைதராபாத்!

Updated: Sun, May 19 2024 19:18 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடைபெற்ற 69ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - அதர்வா டைடே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசித்தள்ளினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் தொடர்ந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அதர்வா டைடே அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பிரப்ஷிம்ரன் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அவருடன் இணைந்த ரைலீ ரூஸோவும் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரப்ஷிம்ரன் சிங் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 71 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாக. மறுப்பகம் அரைசதத்தை நெருங்கிய ரைலீ ரூஸோவும் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 49 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

பின்னர் களமிறங்கிய அதிரடி வீரர் அஷுதோஷ் சர்மாவும் 2 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த கேப்டன் ஜித்தேஷ் சர்மா 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 32 ரன்களைச்ச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த அபிஷேக் சர்மா - ராகுல் திரிபாதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளிய அபிஷேக் சர்மா 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் இருவரும் இணைந்து 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ராகுல் திரிபாதி 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 66 ரன்கள் எடுத்திருந்த அபிஷேக் சர்மாவும் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த நிதீஷ் ரெட்டி - ஹென்ரிச் கிளாசென் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியும் உறுதியானது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதீஷ் குமார் ரெட்டி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய ஷபாஸ் அஹ்மதும் 3 ரன்களில் விக்கெட்டை இழக்க,மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் முடித்துள்ளதுடன், புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை