ஐபிஎல் 2024: பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய ரஹானே!

Updated: Fri, Mar 22 2024 22:47 IST
ஐபிஎல் 2024: பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்ச் பிடித்து அசத்திய ரஹானே! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய் ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளெசிஸ் 35 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 21 ரன்களுக்கும், கேமரூன் க்ரீன் 18 ரன்களுக்கும், ராஜத் பட்டிதார், கிளென்  மேக்ஸ்வெல் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் இணை அதிரடியாக விளையாடி அணியை நல்ல நிலைக்கு அழைத்துச்சென்றனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனுஜ் ராவத் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களையு, தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியின் போது விராட் கோலியின் கேட்சை பிடித்த அஜிங்கியா ரஹானேவின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீசிய பந்தை விராட் கோலி சிக்சருக்கு அடிக்க முயற்சித்து லெக் சைடில் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்கு சென்றது என அனைவரும் நினைத்திருந்த நிலையில் அந்த திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த அஜிங்கிய ரஹானே லாவகமாக ஓடிவந்து பந்தை பிடித்தார். 

ஒருகட்டத்தில் அவர் பவுண்டரி எல்லையை தாண்டிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடனடியாக சூதாரித்த ரஹானே அருகிலிருந்த ரச்சின் ரவீந்திராவிடம் பந்தை வீச அவரும் அதனை பிடித்தார். இதனால் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் அஜிங்கியா ரஹானே பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை