அபார கேட்ச் பிடித்து அசத்திய சன்வீர் சிங்; அதிர்ச்சியடைந்த ஸ்டொய்னிஸ் - வைரல் காணொளி!

Updated: Wed, May 08 2024 20:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தோடரில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ஹைதராபாத் அணியை பந்துவீச அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியின் மூன்றாவது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் அந்த ஓவரின் முதல் பந்திலேயே 2 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக டி காக் அந்த பந்தை சிக்ஸர் அடிக்க முயற்சித்து தூக்கி அடித்த பந்தை பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்த நிதீஷ் ரெட்டி கேட்ச் பிடித்து அசத்தினார். 

அவரைத்தொடர்ந்து நடப்பு சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் களமிறங்கினார். இதில் இன்னிங்ஸின் 5ஆவது ஓவரை மீண்டும் புவனேஷ்வர் குமார் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே 3 ரன்களை எடுத்திருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் லக்னோ அணி 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது.

அதிலும் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் லாங் ஆன் திசைக்கு மேல் தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்தில் வேகத்தை கணிக்க தவறிய ஸ்டொய்னிஸ், தனது ஷாட்டை விளையாட அதனை 30யார்ட் சர்கிளில் நின்றிருந்த சன்வீர் சிங் சரியாக கணித்ததுடன் அபாரமான கேட்சைப் பிடித்து அசத்தினார். இருப்பினும் நடுவர்களுக்கு அந்த கேட்சியில் சந்தேகம் இருந்ததால், முடிவு மூன்றாம் நடுவரிடம் சென்றது. 

மூன்றாம் நடுவரின் சோதனையில் சன்வீர் சிங் பந்தை சரியாக பிடித்தது தெரியவந்தது. இதனால் அவரும் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இதனை சற்றும் எதிபார்க்காத ஸ்டொய்னிஸ் நடுவரிடம் விவாதித்த பிறகு களத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சன்வீர் சிங்கின் அபாரமான கேட்ச்சின் மூலம் மார்கஸ் ஸ்டொய்னிஸ் விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை