துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்?

Updated: Thu, Oct 26 2023 16:38 IST
துபாயில் நடத்தப்படும் ஐபிஎல் வீரர்கள் ஏலம்? (Image Source: Google)

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களில் பெரும் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர் இதுவரை வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்துள்ளது. 10 அணிகள், 250 வீரர்கள், 2 மாதங்கள், ஒரு கோப்பை என்று நடக்கும் ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடக்கவுள்ளதால், ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக ஒருமுறை தென் ஆப்பிரிக்காவிலும், மற்றொரு முறை ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடத்தப்பட்டது. அதேபோல் கரோனா பாதிப்பு ஏற்பட்ட போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

ஆனால் இம்முறை இந்தியாவிலேயே தொடரை நடத்த பிசிசிஐ தீவிரமாக உள்ளது. இதனை சில வாரங்களுக்கு முன்பு ஐபிஎல் சேர்மேன் அருண் சிங் துமால் உறுதி செய்தார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் எப்போது நடக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடைஎயெ எழுந்துள்ளது. ஏனென்றால் கடந்த ஆண்டு டிசம்பர் மாத கடைசி வாரத்தில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொச்சியில் நடைபெற்றது.

அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் விவரத்தை வெளியிட வேண்டும். அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் விவரத்தை அளிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருவதால், அதன்பின் ஐபிஎல் அணிகள் வீரர்களின் விவரங்களை அளிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலம் டிசம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இம்முறை இந்தியாவில் இல்லாமல் துபாயில் ஏலத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டிசம்பர் 9ஆம் தேதி மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும், டிசம்பர் 15 முதல் 19ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை