ஐபிஎல் 2024: வீரர்கள் மினி ஏலத்தை நடத்தும் மல்லிகா சாகர்!

Updated: Tue, Dec 05 2023 20:31 IST
Image Source: Google

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் 19ஆம் தேதி துபாயில் நடக்கவுள்ளது. கடந்த 16 ஆண்டுகளாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக வெளிநாட்டில் ஐபிஎல் ஏலம் நடக்கவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மினி ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் சூழலில், மொத்தமாக மினி ஏலத்தில் பங்கேற்க 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் இந்தியாவில் இருந்து 830 வீரர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் 10 ஐபிஎல் அணிகளால் மொத்தமாக 77 இடங்களை மட்டுமே நிரப்ப முடியும். அதில் 30 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 47 இந்திய வீரர்களின் இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

இந்த நிலையில் இம்முறை ஐபிஎல் ஏலத்தை நடத்தவுள்ள ஏலதாரரை மாற்ற ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஐபிஎல் ஏலத்தை ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மீட்ஸ் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். அதிலும் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஹசரங்காவை ஏலம் விட்டபோது எட்மீட்ஸ் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து உடனடியாக சாரு சர்மா ஏலத்தை நடத்தி கொடுத்தார். அதன்பின் கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தினார். ஆனால் இம்முறை ஐபிஎல் ஏலதாரராக பெண் ஒருவரை ஐபிஎல் நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் புரோ கபடி லீக் ஏலத்தில் நடத்தி வருகிறார். அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், ஐபிஎல் ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் முதல் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை