பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Sat, Mar 30 2024 11:30 IST
பேட்டிங், பவுலிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 83 ரன்களைச் சேர்த்தார். கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தைக் கொடுத்தனர். இதனால் முதல் 6  ஓவர்களிலேயே அந்த அணி 85  ரன்களைச் சேர்த்தது. அதன்பின் சுனில் நரைன் 47 ரன்களுக்கும், பில் சால்ட் 30 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன், 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 50 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். 

இந்நிலையில் இப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “இப்போட்டியின் முதல் இன்னிங்ஸ்ஸின் போதே மைதானத்தின் தன்மை இருவேறு விதமாக இருந்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பந்து ஸ்விங் ஆனதால் அது அவர்களுக்கு மிகவும் உதவியது. விராட் கோலி போன்ற பேட்ஸ்மேனே பந்தை அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டதை பார்க்கும் போதே உங்களுக்கு மைதானத்தின் தன்மையானது மெதுவாக இருந்தது புரிந்திருக்கும்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது கொல்கத்தா வீரர்களுக்கு சாதகமாக பனிப்பொழிவும் இருந்தது. பவர் பிளேவிலேயே சுனில் நரைன் மற்றும் பில் சால்ட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்தார்கள். அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி வந்ததால் முதலில் சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம்.

ஆனால் முதல் ஆறு ஓவர்களிலேயே அவர்கள் போட்டியை உடைத்து விட்டார்கள்.  இந்த போட்டியில் ரஸல் அதிகமாக கட்டர் பந்துகளை வீசினார். அதனாலே நாங்கள் வைசாக் விஜயகுமாரை அணிக்குள் கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக இந்த தோல்வியைச் சந்தித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை