17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 60ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தமதமானது. அதன்பின் 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சிக்ஸருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய பில் சால்ட் 6 ரன்களிலும், சுனில் நரைன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் க்ளீன் போல்டாகினார். இதனால் கேகேஆர் அணி 40 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த வெங்கடேஷ் ஐயர் - நிதீஷ் ரானா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

Advertisement

தொடர்ந்து இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 42 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிதீஷ் ரானாவும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 33 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் 6ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸலும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களில் நடையைக் கட்டினார். 

பின்னர் இணைந்த ரிங்கு சிங் - ரமந்தீப் சிங் இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அதிரடியாக விளையாடி வந்த ரிங்கு சிங் 2 சிக்ஸர்களுடன் 20 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரமந்தீப் சிங் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் பியூஷ் சாவ்லா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அடிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா 19 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் களமிறங்கிய திலக் வர்மா ஒருபக்கம் அதிரடியாக விளையாடினாலும், மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும், டிம் டேவிட் ரன்கள் ஏதுமின்றியும், நெஹால் வதேரா 3 ரன்களிலும், நமன் தீர் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களிலும் ஆட்டமிழக்க, 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் 16 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் ஹர்ஷித் ரானா, வருண் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Advertisement

இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதிப்பெற்ற முதல் அணி எனும் பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றுள்ளது. அதேசமயம் மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News