ஐபிஎல் 2024: ராகுல், ஹர்ஷல் அபார பந்துவீச்சு; சிஎஸ்கேவை 167 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!

Updated: Sun, May 05 2024 17:18 IST
ஐபிஎல் 2024: ராகுல், ஹர்ஷல் அபார பந்துவீச்சு; சிஎஸ்கேவை 167 ரன்களில் கட்டுப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தர்மசாலாவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அஜிங்கியா ரஹானே 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல், கேப்டன் கெய்க்வாட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை வீச ரகுல் சஹார் வந்தார். 

அந்த ஓவரின் முதல் பந்திலேயே அரைசதத்தை நெருங்கிக்கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் தூபே மீண்டும் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத்தொடர்ந்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேரில் மிட்செலும், 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலியும், 11 ரன்களை எடுத்திருந்த மிட்செல் சாண்ட்னரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷார்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடியதுடன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனியும் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அவரைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் 43 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ராகுல் சஹார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை