ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே!

Updated: Sun, Apr 28 2024 23:33 IST
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சிஎஸ்கே! (Image Source: Google)

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தியது. சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வெனற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - அஜிங்கியா ரஹானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அஜிங்கியா ரஹானே தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கெய்க்வாட்டுடன் இணைந்த டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், ஸ்கோரையும் உயர்த்தினர். ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய டேரில் மிட்செலும் 28 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்கள் எடுத்த நிலையில் டேரில் மிட்செலின் விக்கெட்டை ஜெய்தேவ் உனாத்கட் கைப்பற்றினார். ஆனாலும் மறுபக்கம் அபாரமாக விளையாடிய கெய்க்வாட் தனது அதிரடியைத் தொடர்ந்தார்.

அதேசமயம், நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஷிவம் தூபேவும் சிக்ஸர்களை பறக்கவிட ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 98 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அடுத்து களமிறங்கிய மகேந்திர சிங் தோனி வழக்கம்போல் பவுண்டரி விளாசி இன்னிங்ஸைத் தொடங்கினார். அதேசமயம் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த ஷிவம் தூபே ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்து ஃபினிஷிங்கை கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், நடராஜன் மற்றும் உனாத்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் மற்றொரு அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மாவும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 15 ரன்கள் எடுத்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பவர்பிளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இணைந்த ஐடன் மார்க்ரம் - நிதீஷ் ரெட்டி இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் நிதீஷ் ரெட்டி 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐடன் மார்க்ரம் 32 ரன்கள் சேர்த்த நிலையில் மதீஷா பதிரானாவின் அபாரமான யார்க்கர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அணியின் கடைசி நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென் 20 ரன்களுக்கும், அப்துல் சமத் 19 ரன்களுக்கும் என அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழக்க, சிஎஸ்கே அணியின் வெற்றியும் உறுதியானது. பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் 5 ரன்கள் எடுத்த நிலையில் தேஷ்பாண்டே பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரனா, முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை