ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி மழையால் பாதிக்கும் அபாயம்; போட்டி ரத்தானால் என்ன ஆகும்?
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் மிக முக்கியமான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றால் நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்கும், அதேசமயம் ஆர்சிபி அணி வெற்றிபெறுவதுடன் நல்ல ரன்ரேட்டில் இருக்கும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இப்போட்டியானது பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று விடாது மழை பெய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் நாளைய தினமும் பெங்களூருவில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நளைய போட்டி நடைபெறும் என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது. ஒருவேளை நாளைய போட்டி மழையால் கைவிடப்பட்டால் சிஎஸ்கே அணி எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இதனிடையே பெங்களூரு மைதானத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த வடிகால் அமைப்பு இருப்பதால், மழை பெய்தாலும் பிரச்சனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் ஒருநாள் முழுவதும் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை சரிசெய்யும் வகையில் இந்த மைதானத்தின் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மழை நின்று 15 நிமிடங்களுக்குள் அனைத்து பகுதிகளில் இருந்து தண்ணீரை அகற்றும் வகையில் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நாளைய போட்டி நிச்சயம் நடைபெறும் என்று பெங்களூரு மற்றும் சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.