ஐபிஎல் 2024: வார்னர், பந்த் அரைசதம்; சிஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகபட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் இரண்டு ஓவர்கள் பொறுமை காத்த நிலையில், மூன்றாவது ஓவரிலிருந்து தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் தனது 62ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் சேர்த்திருந்த டேவிட் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரித்வி ஷா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த கேப்டன் ரிஷப் பந்த் - மிட்செல் மார்ஷ் இணையும் அதிரடியாக விளையாடும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொண்டனர். இதில் மிட்செல் மார்ஷ் 18 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்து களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என மதீஷா பதிரனாவின் யார்கருக்கு அடுத்தடுத்து க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பந்த் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் தனது அரைசதத்தை கடந்த அடுத்த பந்திலேயே 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 51 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.