17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கத்தில் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்டனர்.

Advertisement

அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய, ரவீந்திரா பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். இதனால் சிஎஸ்கே அணி முதல் 5 ஓவர்களுக்குள்ளே 50 ரன்களைக் கடந்து அசத்தியது. அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 46 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

இதனையடுத்து களமிறங்கிய அஜிங்கியா ரஹானேவும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சாய் கிஷோரிடம் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே சந்தித்த முதலிரண்டு பந்துகளையும் சிக்சர்களுக்கு விளாசி தனது வருகையை பதிவுசெய்தார். அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அரைசதத்தை நெருங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர்கள் என 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் தூபே 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 51 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சமீர் ரிஸ்வி தனது அறிமுக போட்டியிலேயே ரஷித் கான் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். அதன்பின் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரிஸ்வி தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 7 ரன்களில் ரன் அவுட்டானார். 

மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேரில் மிட்செல் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா, ஸ்பென்ஸர் ஜான்சன், சாய் கிஷோர் ஆகியோ தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News