ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது கேகேஆர்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பந்துவீச அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு அபாரமான தொடக்கத்தைக் கொடுப்பார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பின் இணைந்த ராகுல் திரிபாதி மற்றும் ஐடன் மார்க்ரம் இணை ஓரளவு தக்குப்பிடித்து விளையாடியதுடன் அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியிலும் இறங்கினர்.
இதில் ராகுல் திரிபாதி 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிதீஷ் ரெட்டியும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 13 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஐடன் மார்க்ரமுடன் இணைந்த நம்பிக்கை நட்சத்திர ஹென்ரிச் கிளாசென் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் மறுப்பக்கம் இப்போட்டியிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஐடன் மார்க்ரம் 20 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதனைத்தொடர்ந்து வந்த ஷபாஸ் அஹ்மத் 8 ரன்களிலும், அப்துல் ஷமத் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, அணியின் நம்பிக்கையாக இருந்த ஹென்ரிச் கிளாசெனும் 16 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க, இறுதிவரை போராடிய கேப்டன் பாட் கம்மின்ஸும் 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேகேஆர் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுதனர். இதில் சுனில் நரைன் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து இன்னிங்ஸைத் தொடங்கிய நிலையில், அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் முதல் பந்தில் இருந்தே பவுண்டரியும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். அவருக்கு துணையாக ரஹ்மனுல்லா குர்பாஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 72 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் தொடர்ந்து இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை ஏறத்தாழ உறுதிசெய்தனர். இப்போட்டியில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனாலும் மறுப்பக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பின் கேகேஆர் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.