ஐபிஎல் 2024: முழு தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனில் காலடி எடுத்துவைத்துள்ளது. அதன்படி கடந்த 22ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கிய இத்தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதேசமயம் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன்பின் இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி ஆட்டவணையை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டி அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் குவாலிஃபையர் மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சில ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது நடைபெறவுள்ளதால் தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.