ஐபிஎல் 2024: ராபின் மின்ஸிற்கு பதிலாக பிஆர் சரத்தை ஒப்பந்தம் செய்தது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Fri, Mar 22 2024 13:21 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் இன்று முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்று சேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. 

அதிலும் இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடனும், ஆவலுடனும் காத்திருக்கின்றனர். அதேசமயம் ஐபிஎல் தொடரின் மற்ற அணிகளும் தங்களது லீக் சுற்றுக்கு தயாராகும் வகையில் தீவிர பயிசியில் ஈடுபட்டு வருகின்றனர். 

முன்னதாக இத்தொடரின் வீரர்கள் ஏலத்தின் போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ராபின் மின்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி 3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதுவரை ஒருசில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ராபின் மின்ஸ் பெயர் ஏலப்பட்டியலில் வந்ததும் அவரை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆர்வம் காட்டினர். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. 

இதுவரை ஐபிஎல் தொடரில் அறிமுகமில்லாத ராபின் மின்ஸிற்கு சிஎஸ்கே - குஜராத் அணிகள் போட்டி போட்டு ஏலத்தில் இறங்கியதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. அதேபோல் ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் முதல் பழங்குடியின வீரர் எனும் பெருமையையும் ராபின் மின்ஸ் பெற இருந்தார். இப்படி அவர் மீதான எதிர்பார்ப்புகள் ஒருபக்கம் அதிகரித்து வந்த நிலையில், ராபின் மின்ஸ் சாலை விபத்தில் சிக்கினார்.

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருதால் நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் சந்தேகங்களும் எழுந்தன. இந்நிலையில் ராபின் மின்ஸிற்கு பதிலாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கர்நாடகா அணிக்காக விளையாடி வரும் பிஆர் பரத்தை மாற்று வீரராக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது. மேலும் அவரது அடிப்படை தொகையான ரூ.20 லட்சத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் ராபின் மின்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை