ஐபிஎல் 2024: சிறப்பு ஜெர்ஸியில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் - காரணம் என்ன!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளன.
அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது. இதனால் மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது இதுவரை இந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த அணி நாளை நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதைத்தொடர்ந்து குஜராத் அணியானது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வரும் மே 13ஆம் தேதி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிரத்யேக ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது நீல இளஞ்சிவப்பு (லாவெண்டர்) நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளது. இதற்கான காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியவும் மற்றும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த லாவெண்டர் நிற ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளனர்.
ஏற்கெனவே குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த இரண்டு சீசன்களாக ஏதேனும் ஒரு போட்டியில் இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடிய நிலையில், நடப்பு சீசனிலும் அதனைத் தொடர்கிறார். குஜராத் அணியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிரத்யேக ஜெர்ஸியை அணிந்து விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.