முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி? - மனம் திறந்துள்ள சமீர் ரிஸ்வி!

Updated: Fri, Mar 29 2024 20:44 IST
முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது எப்படி? - மனம் திறந்துள்ள சமீர் ரிஸ்வி! (Image Source: Google)

 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடருக்கான ஐபிஎல் மினி ஏலத்தில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஐபிஎல் தொடரில் அறிமுகமில்லாத வீரருக்கு சிஎஸ்கே அணி இவ்வளவு தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்ததன் மூலம் சமீர் ரிஸ்வி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

அதன்படி நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ரிஸ்விக்கு அப்போட்டியில், பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சமீர் ரிஸ்வின் ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கினார். அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசினார். 

இப்போட்டியில் ரஷித் கான் பந்துவீச்சில் தனது முதல் பந்தை சந்தித்த சமீர் ரிஸ்வி யாரும் எதிர்பாராத வகையில் ஸ்கெயர் லெக் திசையில் சிக்சர் விளாசி தனது வருகையை பதிவுசெய்தார். அத்துடன் அதே ஓவரில் மீண்டும் இறங்கி வந்து நேராக மற்றொரு சிக்சரையும் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். இதன்மூலம் சமீர் ரிஸ்வி அதிரடியாக தனது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது குறித்து சமீர் ரிஸ்வி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அந்த போட்டியின் 19ஆவது ஓவரை ரஷித் கான் வீசியதும், பயிற்சியாளர் என்னிடம் வந்து இந்த ஓவரில் விக்கெட் வீழ்ந்தால் நீங்கள் உடனே களமிறங்குகள் என கூறினார்.  அதன்படி19ஆவது ஓவரில் களமிறங்கும்போது நீங்கள் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. அந்த சூழலில் பந்தை தெளிவாக பார்த்து அடிக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியமான விஷயமாக இருந்தது.

உங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. ஆனால், பந்து அடிப்பதற்கு ஏதுவான இடத்தில் வீசப்படும் பட்சத்தில், அதனை சரியாக எதிர்கொண்டு அடிக்க வேண்டும் என நினைத்தேன். எனது உள்ளூர் போட்டிகளை பார்த்தால் கூட அங்கு நான் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளதை பார்க்கலாம். நான் எப்போது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். 

நான் சிறுவயது முதலே எனது மாமாவுடன் இணைந்து சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள பயிற்சிபெற்றுள்ளேன். பல ஆண்டுகளாக நான் இதனை செய்துவருதால் சர்வதேச பந்துவீச்சாளருக்கு எதிராக என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது. மார்ச் 16 அன்று நான் அணியில் சேர்ந்தபோது தோனியை முதல்முறையாக நேரில் சந்தித்தேன். அன்றைய தினம் நாங்கள் பெரிதாக எதுவும் பேசமுடியவில்லை. அதன்பின் நாங்கள் மைதானத்தில் ஓவ்வொரு நாளும் இணைந்து செயல்பட்டுவருகிறோம்.

அதிலும் அவர் மைதானத்தில், அழுத்தத்தை எப்படிக் கையாள்வது, கூட்டத்தின் முன் எப்படி விளையாடுவது என்பதற்கான சில குறிப்புகளை எனக்குக் கற்றுக் கொடுத்தார். என்னுடைய இயல்பான விளையாட்டை விளையாடச் சொன்னார். சிஎஸ்கே அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் இனிமையான உணர்வு. அதிலும் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து அவருடன் இணைந்து விளையாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை