சிஎஸ்கேவுக்கு எதிராக மயங்க் யாதவ் விளையாடுவார் - ஜஸ்டின் லாங்கர்!

Updated: Thu, Apr 11 2024 19:57 IST
சிஎஸ்கேவுக்கு எதிராக மயங்க் யாதவ் விளையாடுவார் - ஜஸ்டின் லாங்கர்! (Image Source: Google)

ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்தியாவின் இளம் வீரர்கள் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்து வருகிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யாகுமார் யாதவ், ரிங்கு சிங், நடராஜன், உம்ரான் மாலிக், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்குள் இடம்பிடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி நட்சத்திர வீரர்களாக உருவெடுத்துள்ளனர். 

அந்தவரிசையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்த் வீச்சாளர் மயங்க் யாதவும் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மணிக்கு சுமார் 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீசிவரும் அவர், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அப்போட்டியிலும் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இதனால் மயங்க் யாதவின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆனால் கடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரை மட்டுமே விசிய அவர், காயம் காரணமாக போட்டியின் பாதியிலேயே வெளியேறினார். 

இதனையடுத்து, மயங்க் யாதவ் அடிவயிற்றுப் பகுதியில் வலியை உணர்ந்தார், முன்னெச்சரிக்கையாக, அடுத்த வாரத்தில் அவரது பணிச்சுமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறோம். அவரை விரைவில் களத்தில் காண்போம் என நம்புகிறோம் என்று அந்த அணியின் நிர்வாக அதிகாரி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் யாதவ் விளையாடுவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசிய பிறகு அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் வலி ஏற்பட்டது, அதனால்தான் அவரது வேகம் சற்று குறைந்தது. பின் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார். இருப்பினும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் களமிறங்குவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை