அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 17.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினோம் என்று நினைக்கிறேன். ஆனாலும் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அந்த சரிவிலிருந்து மீண்டு வர முடியவில்லை. மேலும் இந்த மைதானத்தின் சூழ்நிலையை கணித்து எங்களால் விளையாட முடியாமல் போனதே தோல்விக்கு முக்கிய காரணமாகும்.
பவர்பிளேவிற்கு பிறகு மைதானம் ரன் குவிக்க கடினமாக மாறியது. அதேசமயம் சிஎஸ்கே வீரர்கள் இந்த மைதானத்தின் தன்மையை உணர்ந்து பந்துவீசினர். அவர்கள் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசியதில் இருந்து பேட்டர்களால் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறினர். நாங்கள் சரிவிலிருந்து மீண்டு இன்னிங்ஸை கட்டமைக்க முயற்சித்தோம், ஆனால் அது எங்களது திட்டத்தின் படி நடக்கவில்லை. பவர்பிளேக்குப் பிறகு விக்கெட் மாறியது.
அதனால் இந்த போட்டியில் 160 முதல் 170 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களால் நினைத்த இலக்கை எட்டமுடியவில்லை. அதனால் நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை தெரிந்துகொண்டு அதனை சரிசெய்து அடுத்த போட்டியில் நிச்சயம் வலிமையாக திரும்புவோம் என்று” தெரிவித்துள்ளார்.