அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

Updated: Fri, Apr 26 2024 13:33 IST
அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் வெற்றி மிகவும் மகிழ்ச்சியானது - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி விராட் கோலி, ராஜத் பட்டிதார் ஆகியோரது அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்க்ளையும், ராஜத் பட்டிதார் 50 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “கடந்த இரண்டு போட்டிகளாகவே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போராடியுள்ளோம் என்று நம்புகிறேன். கடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 270 ரன்களுக்கு மேல் அடித்தும் நாங்கள் 260 ரன்கள் வரை இலக்கை துரத்திச் சென்றோம். அதேபோன்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு ரன் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தோம். இப்படி நெருக்கமாக சென்று போட்டிகளை இழந்து வந்த வேளையில் இதுபோன்ற ஒரு வெற்றி என்பது நிச்சயம் எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

இந்த வெற்றியின் மூலம் இன்று நான் நிம்மதியாக தூங்குவோன் என்று நினைக்கிறேன். போட்டியில் வெற்றி பெற்றால் நம்பிக்கை தானாக வெளிவரும். அந்த வகையில் இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இத்தொடர் மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் ஒவ்வொரு அணியும் மிகவும் வலுவாக உள்ளன, நீங்கள் 100 சதவிகிதம் உங்கள் உழைப்பை கொடுக்கவில்லை என்றால் இத்தொடரில் உங்களால் நீடிக்க முடியாது.

இப்போது எங்கள் அணியில் சில வீரர்கள் ரன்களை சேர்த்து வருகின்றனர். முன்னதாக இந்த தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலி மட்டுமே ரன்களை குவித்து வந்த நிலையில், தற்போது கேமரூன் கிரீன், ராஜத் பட்டிதார் போன்ற வீரர்களும் ரன் குவித்து வருவது எங்களுக்கு நன்மை சேர்த்து உள்ளது. சின்னசாமி மைதானத்தில் வைத்து மற்ற அணிகளை வீழ்த்துவது கடினமாக இருந்த வேளையில் தற்போது வெளியில் கிடைத்துள்ள இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை