ரைலீ ரூஸோவை யார்க்கரால் தடுமாறச் செய்த ஜஸ்ப்ரித் பும்ரா - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பையின் ஓப்பனர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷான் கிஷன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்து.
அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்ட, ரோஹித் சர்மா துணை நின்றார். இதனால் 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்த மும்பை 86 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 36 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த சூர்யகுமார் யாதவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டிம் டேவிட் 14 ரன்களில் வெளியேற,இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 34 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த மும்பை 192 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சாம் கரன் 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் பிரப்ஷிம்ரன் சிங் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து நடப்பு சீசனில் தனது முதல் போட்டியில் விளையாடிய ரைலீ ரூஸோவ் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் அபாரமான யார்க்கரின் மூலம் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
அதன்படி இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட ரைலீ ரூஸோ யார்க்கர் என்பதை கணிக்காமல் பந்தை தவறவிட, அது நேரடியாக மிடில் ஸடம்பைத் தாக்கியது. இதனால் ஒரு நிமிடம் தடுமாறிய ரூஸோவ் சோகத்துடன் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் பும்ரா வீசிய அபாரமான யார்க்கர் குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகிறது.