விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில்  எந்த நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுபக்கம் பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்த பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இளம் வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் சுனில் நரைனுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

Advertisement

இதில் சுனில் நரைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அங்கிரிஷ் ரகுவன்ஷி 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும் தனது அதிரடியை கைவிடாத சுனில் நரைன் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசியது 49 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அதன்பின் அணியின் அதிரடி நாயகன் ஆண்ட்ரே ரஸல் 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 109 ரன்கள் எடுத்த நிலையில் டிரெண்ட் போல்ட்டின் அபாரமான யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் வெங்கடேஷ் ஐயர் 8 ரன்காளுக்கு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 20 ரன்களைச் சேர்க்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான், குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து கடின இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஜோஸ் பட்லர் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் அதிரடியாக தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்ட்ரி, ஒரு சிக்ஸர் என 19 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் சிறப்பான தொடக்கத்தை பெற்ற நிலையிலும் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஜோஸ் பட்லருடன் இணைந்த ரியான் பராக் வழக்கம் போல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 

இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ரியான் பராக் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய துருவ் ஜுரெல் 2 ரன்களுக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களுக்கும், ஷிம்ரன் ஹெட்மையர் முதல் பந்திலேயும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் ராஜஸ்தான் அணி 121 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Advertisement

அதேசமயம் இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தியதுடன், அணியை வெற்றியை நோக்கியும் அழைத்துச்சென்றார். அவருக்கு துணையாக ரோவ்மன் பாவேலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எளிதாக வெற்றியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அச்சயமத்தில் சுனில் நரைன் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என விளாசிய ரோவ்மன் பாவெல் 26 ரன்களைச் சேர்த்த நிலையில் அதே ஓவரில் விக்கெட்டையும் இழந்தார். 

இதனால் ஆட்டத்தின் பரபரப்பும் கூடியது. மேலும் கடைசி மூன்று ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 46 ரன்கள் தேவை என்ற நிலையில், மிட்செல் ஸ்டார்க் வீசிய 18ஆவது ஓவரில் 18 ரன்கள் கிடைத்தது. இதன் காரணமாக கடைசி இரண்டு ஓவர்களுக்கு ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 28 ரன்கள் தேவைபட்ட சூழலில், 19ஆவது ஓவரை வீசிய ஹர்ஷித் ரானா பந்துவீசில் ஜோஸ் பட்லர் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 19 ரன்களைக் குவித்து மிராட்டினார்.  தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 55 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், கடைசி பந்தில் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்து அசத்தினார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தைக் தக்கவைத்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் உள்பட் 107 ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததன் மூலம், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News