ஐபிஎல் 2024: வெங்கடேஷ், நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்!

Updated: Fri, Mar 29 2024 22:58 IST
ஐபிஎல் 2024: வெங்கடேஷ், நரைன் அதிரடியில் ஆர்சிபியை வீழ்த்தியது கேகேஆர்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  பெங்களூருவிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வழக்கம்போல் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி ஆகியோர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபாஃப் டூ பிளேசிஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார். 

தொடர்ந்து இருவரும் அதிரடியாக விளையாட இவர்களது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் க்ரீன் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை விளாசி 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 28 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் சுனில் நரைன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதற்கிடையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்தி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் 6 ஓவர்களில் 85 ரன்களைத் தாண்டியது.

அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 2 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்கள் எடுத்த நிலையில் பில் சால்டும் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணையும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 50 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை