ஐபிஎல் 2024: மிட்செல் ஸ்டார்க் அபாரம்; மும்பை வீழ்த்தி கேகேஆர் அசத்தல் வெற்றி!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
ஏனெனில் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து நுவான் துஷாராவின் இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுனில் நரைன் ஒரு சிக்ஸருடன் 8 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு நட்சத்திர வீரர் ரிங்கு சிங்குவும் 9 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதல் 6.1 ஓவர்களில் 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த வெங்கடேஷ் ஐயர் - இம்பேக்ட் வீரர் மனீஷ் பாண்டே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய மனீஷ் பாண்டே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 7 ரன்களுக்கும், ரமந்தீப் சிங் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும், இறுதிவரை களத்தில் இருந்த வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நுவான் துஷாரா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய இஷான் கிஷன் 13 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நமன் திரும் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கினார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை மட்டுமே சேர்த்தது தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உய்ர்த்த, மறுபக்கம் களமிறங்கிய திலக் வர்மா 4 ரன்களுக்கும், நெஹால் வதேரா 6 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் ஒரு ரன்னோடு நடையைக் கட்டினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 71 ரன்களில் 6ஆவது விக்கெட்ட இழந்து தோல்வியின் விளிம்பிள் தத்தளித்தது.
ஆனாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அணியை வெற்றிபெற செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 56 ரன்களில் விக்கெட்டை இழக்க, மும்பை அணியின் தோல்வியும் ஏறத்தாழ உறுதியானது. பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் - ஜெரால்ட் கோட்ஸி ஆகியோராலும் பந்தை சரியாம டைமிங் செய்ய முடியாததால் அணியின் தோல்வியும் உறுதியாகியது. இறுதியில் மும்பை அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
கேகேஆர் அணி தரப்பில் 19ஆவது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீச, அந்த ஓவரை எதிர்கொண்ட டிம் டேவிட் முதல் பந்தை சிக்ஸர் விளாசி அசத்தினார். அதப்பின் இரண்டாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்த டேவிட் 24 ரன்களைச் சேர்த்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேகேஆர் அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கல் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்துள்ளதுடன், நடப்பு சீசனின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் ஒரு அடி முன்னேறியுள்ளது. அதேசமயம், நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டுவரும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த தோல்வியுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் வாய்ப்பிலிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.