ஐபிஎல் 2024: பூரன், ராகுல் அரைசதம்; மும்பை அணிக்கு 215 ரன்கள் இலக்கு!

Updated: Fri, May 17 2024 21:33 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்டை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 67ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஏல் ராகுல் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

இப்போட்டியில் தேவ்தத் படிக்கல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். இதில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கஸ் ஸ்டொய்னிஸின் விக்கெட்டை பியூஷ் சாவ்லா தனது முதல் ஓவரிலேயே கைப்பற்றினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய் தீபக் ஹூடாவும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, லக்னோ அணி 69 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதனையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வானவேடிக்கை காட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பூரன், அர்ஜூன் டெண்டுகள் வீசிய இன்னிங்ஸின் 15ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசியதுடன் 19 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். அவருக்கு துணையாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கேஎல் ராகுலும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. 

பின்னர் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் 75 ரன்களைச் சேர்த்த நிலையில் நிக்கோலஸ் பூரனும், 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 55 ரன்கள் சேர்த்த நிலையில் கேஎல் ராகுலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் ஆயூஷ் பதோனி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி 22 ரன்களையும், குர்னால் பாண்டியா 12 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நுவான் துஷாரா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை