ஐபிஎல் 2024: ராகுல், ஹூடா அரைசதம்; ராஜஸ்தான் அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

Updated: Sat, Apr 27 2024 21:20 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 44ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு குயின்டன் டி காக் - கேப்டன் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரி விளாசிய டி காக், மூன்றாவது பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் கடந்த போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மார்கஸ் ஸ்டொய்னிஸும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் லக்னோ அணி 11 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் - தீபக் ஹுடா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் கேஎல் ராகுல் 31 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தீபக் ஹூடாவும் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்களைச் சேர்த்திருந்த தீபக் ஹூடா தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரனும் 11 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 76 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 18 ரன்களையும், குர்னால் பாண்டியா 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை