ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸை 144 ரன்களில் சுருட்டியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா வெறும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவும் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவர்களைத்தொடர்ந்து நிதானமாக விளையாடிய திலக் வர்மா தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பவர்பிளேவில் மட்டுமே 4 விக்கெட்டுகளை இழந்ததுடன், 28 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் இஷான் கிஷனுடன் இணைந்த நெஹால் வதேரா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோர் உயர்ந்ததுடன், இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் இஷான் கிஷன் 3 பவுண்டரிகளுடன் 32 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேஹால் வதேரா 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய முகமது நபியும் ஒரு ரன்னோடு விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் டேவிட் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் மொஹ்சின் கான் 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னி, நவீன் உல் ஹக், மயங்க் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.