ஆஸி வீரர்களை வேகத்தால் அலறவிட்ட மயங்க் யாதவ்; வைரலாகும் காணொளி!
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் இந்தியாவின் இளம் வீரர்கள் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்து வருகிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின், சூர்யாகுமார் யாதவ், ரிங்கு சிங், நடராஜன், உம்ரான் மாலிக், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மிக முக்கியமானவர்களாக பார்க்கப்படுகின்றனர். ஏனெனில் இவர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் இந்திய அணிக்குள் இடம்பிடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட்டிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி நட்சத்திர வீரர்களாக உருவெடுத்துள்ளனர்.
அந்தவரிசையில் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்த் வீச்சாளர் மயங்க் யாதவும் தனது பெயரை பதிவுசெய்துள்ளார். மணிக்கு சுமார் 150 கிமீ வேகத்தில் சராசரியாக பந்துவீசிவரும் அவர், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது அறிமுக போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியிலும் தனது வேகத்தால் மிரட்டி வரும் மயங்க் யாதவ் அந்த அணியின் அதிரடி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் இவரது பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வருபவர்கள் என்பது தான்.
பொதுவாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் தான் இந்திய பேட்டர்களை தங்களது வேகத்தின் மூலம்அச்சுறுத்தி வந்தனர். ஆனால் இன்று அந்த நிலைமாறி ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர்களை இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரு அச்சுறுத்தியதுடன், அவர்களது விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கேமரூன் க்ரீன் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்படி, இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை மயங்க் யாதவ் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை எதிர்கொண்ட கேமரூன் க்ரீன் பந்தை தடுக்க முயற்சித்தார். ஆனால் அவர் பந்தை சரியாக கணிக்க தவறியதால், நேராக ஸ்டம்புகளை பதம்பார்த்தது. ஆனால் அந்த பந்து எப்படி பேட்டில் படாமல் ஸ்டம்புகளை தர்த்தது என்று புரியாமல் கேமரூன் க்ரீன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்சிபி அணிக்கு எதிரான இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமக குயின்டன் டி காக் 81 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் ஆர்சிபி அணியானது தற்போதுவரை 5 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.