ஐபிஎல் 2024: முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன்; வைரலாகும் காணொளி!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
அதன்படி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், மார்கோ ஜான்சென் ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
இதனால் கேகேஆர் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையி, மறுபக்கம் இருந்து சுனில் நரைன் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் பந்துவீச வந்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை வீசினார். அதனை எதிர்கொண்ட வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்த தருணத்தில் நடராஜன் பந்துவீச்சில் பாட் கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்ததுடன் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனால் கேகேஆர் அணி 32 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதையடுத்து களமிறங்கிய நிதீஷ் ரானாவும் 9 ரன்களுடன் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதையடுத்து பில் சால்ட்டுடன் இணைந்துள்ள ரமந்தீப் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தனது முதல் ஓவரிலேயே நடராஜன் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.