நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை - ரிஷப் பந்த்!

Updated: Thu, Apr 04 2024 12:07 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு சுனில் நரைன் - பில் சால்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் பவுண்டரி மழை பொழிந்த சுனில் நரைன் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய அங்கிரிஷ் ரகுவன்ஷியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

அதன்பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் 84 ரன்கள் எடுத்த நிலையில் சுனில் நரைன் விக்கெட்டை இழக்க, 54 ரன்களில் அங்கிரிஷ் ரகுவன்ஷியும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய் ஆண்ட்ரே ரஸல் 41 ரன்களையும், ரிங்கு சிங் 26 ரன்களையும் சேர்த்ததன் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து, ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.

இதையடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பந்த் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இப்போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த்,  “இப்போட்டியில் நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. இதில் இன்னும் கூடுதலாக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்க வேண்டும். மோசமாக அமையும் நாள்களில் இதுவும் ஒன்று. இப்போட்டியில் எதிரணி எங்களுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்த போது அதை எவ்வாறு அணுகவேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். அதன் அடிப்படையிலேயே நாங்கள் எங்களது பேட்டிங்கைத் தொடர்ந்தோம். 

அதன்படி நாங்கள் இப்போட்டியில் சேஸிங் செய்யாமல் இருப்பதை விட ஆல் அவுட் ஆவது சிறந்தது என நாங்கள் இந்த போட்டியை எதிர்கொண்டோம். விசாகப்பட்டினம் மைதானத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அதனால் நான் ரிவியூ கேட்பதற்கான நேரத்தை ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லை. ஸ்கிரீனில் சில பிரச்சனைகள் இருந்தது. சில விஷயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும், சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியாது, அதனால் நீங்கள் ஆட்டத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டியது அவசியம்.

ஒரு குழுவாகவும், தனிநபராகவும் அடுத்த பேட்டிக்கு சிறந்த முறையில் வலிமையாக திரும்பி வர வேண்டியதற்கான நேரம் இது. கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளையும் நான் அனுபவித்து வருகிறேன், அதில் ஏற்ற தாழ்வுகள் உள்ளன, அதே நேரத்தில் நீங்கள் ஒரு தனி நபராக உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை