ரிஷப் பந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளார் - ஷிகர் தவான்!

Updated: Tue, Mar 12 2024 22:14 IST
ரிஷப் பந்த கடுமையான சூழலில் இருந்து மீண்டு வந்துள்ளார் - ஷிகர் தவான்! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை செப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள அவர் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். 

அதன்படி, ஐபிஎல் 2024 தொடரில் பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும் ரிஷப் பந்த் விளையாட தகுதி பெற்றதாக பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும், முதல் சில போட்டிகளில் பேட்டராக மட்டுமே ரிஷப் பந்த் களமிறங்குவார் என்றும், அவரின் உடல் நிலை பொறுத்து கீப்பிங் செய்வார் என்று டெல்லி அணியின் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ரிஷப் பந்த்தின் நேர்மறையான எண்ணம் அவரை மீண்டும் முழு உடற்தகுதியுடன் கிரிக்கெட் விளையாட செய்துள்ளதாக இந்திய அணியின் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரிஷப் பந்த் மீண்டும் விளையாடுவதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். கார் விபத்துக்குப் பிறகு ரிஷப் பந்த் மிகுந்த வலியில் இருந்தார். அவரது அடிப்படைத் தேவைகளைக் கூட அவராக செய்து கொள்ளமுடியவில்லை. விபத்துக்குப் பிறகு சில மாதங்களுக்கு அவரை கவனித்துக் கொள்ள ஒருவரின் உதவி தேவைப்பட்டது.

கழிப்பறைக்கு செல்வதற்கு கூட அவருக்கு ஒருவரின் உதவி தேவைப்பட்டது. அந்த மாதிரியான கடினமான சூழலில் இருந்து தனது பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றால் அவர் மீண்டு வந்துள்ளார். அது மிகப் பெரிய விஷயம். அவர் பல அற்புதங்களை செய்ய காத்திருக்கிறார். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளதை பார்க்க ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.  ஐபிஎல் கிரிக்கெட்டில் மீண்டும் கம்பேக் கொடுக்கவுள்ள ரிஷப் பந்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை