நாங்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவோம் - ஹர்திக் பாண்டியா!

Updated: Mon, Apr 15 2024 13:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் தூபே ஆகியோரின் அரைசதத்தின் மூலமும், இறுதி நேரத்தில் மகேந்திர சிங் தோனி அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை விளாசி அபாரமான ஃபினிஷிங் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைக் குவித்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா சதமடித்ததைத் தவிற மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூல சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியின் தோல்வி குறித்து பேசிய மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது எங்களுக்கு நிர்ணயித்த இலக்கு எட்டக்கூடிய ஒன்று தன். ஆனால் அவர்கள் பந்துவீச்சில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு போட்டியின் முடிவையும் மாற்றிவிட்டனர். குறிப்பாக பதிரனா வித்தியாசமாக செயல்பட்டார். அதே போன்று ஸ்டெம்பிற்கு பின்னால் நிற்கும் தோனி அணியின் பந்துவீச்சாளர்களை மிக சரியாக வழிநடத்தினார்.

தோனி வகுத்த வியூகங்களும், அவரின் வழிகாட்டுதலும் சென்னை அணி பயனளித்துள்ளது. ஆடுகளத்தின் தன்மை மாறி கொண்டே இருந்தது. பதிரனா பந்துவீச வருவதற்கு முன்பு அனைத்துமே எங்கள் கைவசம் தான் இருந்தது, ஏனெனில் எங்களுக்கு இதைவிட சரியான தொடக்கம் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவர் தனது முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி எங்களை அழுத்தத்தில் தள்ளினார்.

அந்த நேரத்தில் எது சிறந்தது என்பதைப் பற்றி யோசித்து நாங்கள் அதற்கு ஏற்றவாறு ஏதாவது செய்திருக்கலாம். மேலும் இப்போட்டியில் ஷிவம் தூபேவிற்கு சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதை விட வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தலாம் என நினைத்தோம். ஆனால் அது எங்களுக்கு சரியாக அமையவில்லை. அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்துவோம். தோல்வியில் இருந்து மீண்டு வருவோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை