ஐபிஎல் 2024: பேர்ஸ்டோவ், ஷஷாங்க் மிரட்டல்; கேகேஆரை வீழ்த்தி வரலாறு படைத்தது பஞ்சாப் கிங்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிகான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம்போல் சுனில் நரைன் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களை விளாசிதள்ள கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 76 ரன்களைக் குவித்தது. அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேபோல் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட்டும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இப்போட்டியில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரைன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த நிலையில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - ஆண்ட்ரே ரஸல் இணையும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்து 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்ட்ரே ரஸல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் தனது அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ரமந்தீப் சிங் ஒரு சிக்ஸருடன் 6 ரன்களைச் சேர்த்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்ஷிம்ரன் சிங் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜானி பேர்ஸ்டோவ் ஒருமுனையில் நிதானமாக தொடங்கினாலும், மறிபக்கம் பிரப்ஷிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயத்தினார்.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிரப்ஷிம்ரன் சிங் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அதுவரை நிதானம் காத்த ஜானி பேர்ஸ்டோவ் இன்னிங்ஸின் 6ஆவது ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை விளாசி 24 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக விளையாடி வந்த பிரஷிப்ரன் சிங் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 54 ரன்கள் சேர்த்த நிலையில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்த நிலையில் 93 ரன்களைக் குவித்தது.
அதன்பின் களமிறங்கிய ரைலீ ரூஸோவ் ஒருபக்கம் நிதானம் காட்ட, மறுமுனையில் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசித்தள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சுளார்களுக்கு என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நின்றனர். இதில் ரைலீ ரூஸோவ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 45 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.
குறிப்பாக நடப்பு ஐபிஎல் சீசனில் பெரிதளவில் ஃபார்ம் இல்லாமல் தவித்து வந்த ஜானி பேர்ஸ்டோவ் கடந்த இரண்டு போட்டிகளில் அணியின் பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்கப்பட்டார். இதையடுத்து இன்று மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்த ஜானி பேர்ஸ்டோவ் தனது கம்பேக் போட்டியில் சதமடித்து மிரட்டினார். மறுபக்கம் களமிறங்கிய ஷஷாங்க் சிங்கும் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றியும் எளிதானது. இதில் தனது பங்கிற்கு சிக்ஸர்களை விளாசித் தள்ளி வந்த ஷஷாங்க் சிங்கும் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜானி பேர்ஸ்டோவ் 8 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 108 ரன்களையும், ஷஷாங்க் சிங் 2 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 67 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை எட்டிய அணி எனும் வரலாற்று சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.