ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sat, Apr 13 2024 23:21 IST
ஐபிஎல் 2024: நொடிக்கு நொடி பரபரப்பு; பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்ரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். மேலும் இன்றைய போட்டியில் ஷிகர் தவான் விளையாடாத காரணத்தில் சாம் கரண் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தினார். 

இதையடுத்த் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதர்வா டைடே - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பேர்ஸ்டோவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அதர்வா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். ஆனால் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அதர்வா டைடே தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் பிரப்ஷிம்ரன் சிங்கும் 10 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கும், கேப்டன் சாம் கரண் 6 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அணியின் நட்சத்திர வீரர் ஜிதேஷ் சர்மா - ஷஷாங்க் சிங் இணை அணியை சரிவிலிருந்து மீட்டுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷஷாங்க் சிங் இப்போட்டியில் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜித்தேஷ் சர்மாவும் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களை எடுத்து ஆவேஷ் கான் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - அஷுதோஷ் சர்மா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நம்பிக்கையளித்த லியாம் லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 21 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் தரப்பில் கேசவ் மகாராஜ், ஆவேஷ் கான் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் - தனுஷ் கோட்யான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருபக்கம் ரன்களைச் சேர்த்தாலும், மறுபக்கம் களமிறங்கிய தனுஷ் அடுத்தடுத்து பந்துகளை கணிக்கத்தவறினார். இதனால் அணியின் ஸ்கோரும் மந்தமாகவே உயர்ந்தது. அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், தனுஷ் கோட்யான் 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைந்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 39 ரன்களைச் சேர்த்து காகிசோ ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சனும் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடாவின் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தின் அழுத்தம் அதிகரிக்க, அணியின் நம்பிக்கையாக இருந்த ரியான் பராக்கும் 23 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி மூன்று ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் 18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீச, அதனை எதிர்கொண்ட துருவ் ஜுரெல் 6 ரன்களுக்கு விக்கெட்டை இழந்ததால் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் மீதான அழுத்தமும் அதிகரித்தது. ஆனால் அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ஷிம்ரான் ஹெட்மையர் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களை அடித்து அணியின் மீதான அழுத்தத்தைக் குறைத்தார். பின் அடுத்த ஓவரை சாம் கரண் வீசினார். அதனை எதிர்கொண்ட ரோவ்மன் பாவெல் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை அடித்ததுடன், அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்ததால் ஆட்டத்தின் வெற்றி எந்த பக்கம் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

மேலும் அந்த ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட கேசவ் மகாராஜ் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழக்க, கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற சூழல் உருவானது. பஞ்சாப் அணி தரப்பில் கடைசி ஓவரை ஆர்ஷ்தீப் சிங் வீசினார். அதனை எதிர்கொண்ட ஷிம்ரான் ஹெட்மையர் முதல் இரண்டு பந்துகளை தவறவிட்டார். அதன்பின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு விளாசியதுடன், அடுத்த பந்தில் இரண்டு ரன்களையும், 5ஆவது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரையும் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்கமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த ஷிம்ரான் ஹெட்மையர் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் தங்களது முதல் இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை