2,6,4,6,6,6 - கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய ரிஷப் பந்த் - வைரலாகும் காணொளி!

Updated: Wed, Apr 24 2024 22:43 IST
2,6,4,6,6,6 - கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய ரிஷப் பந்த் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிக்கான டெல்லி அணியில் டேவிட் வார்னர், லலித் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் - பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடியாக விளையாடும் முயற்சியில் பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசினர். பின் மெக்குர்க் 23 ரன்களுக்கும், பிரித்வி ஷா 11 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப்பும் 5 ரன்களோடு நடையைக் கட்டினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் - ரிஷப் பந்த் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். இதில் அக்ஸர் படேல் 66 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 88 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 26 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் மொஹித் சர்மா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ரிஷப் பந்த் முதல் பந்தில் இரண்டு ரன்களையும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும், மூன்றாவது பந்தில் பவுண்டரியும் அடித்தார். 

 

அதன்பின் கடைசி மூன்று பந்துகளிலும் அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி அணிக்கு மிரட்டலான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் அந்த ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 30 ரன்களை விளாசித்தள்ளினார். இதன் காரணமாகவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த ஸ்கோரை எட்டியது. இந்நிலையில் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்தின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை