ஐபிஎல் 2024: வான வேடிக்கை காட்டிய ஆர்சிபி பேட்டர்ஸ்; சிஎஸ்கே அணிக்கு 219 ரன்கள் டார்கெட்!

Updated: Sat, May 18 2024 22:02 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 68 ஆவது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறு அணி எது என்ற வாழ்வா சாவா என்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இதனால் அந்த அணி முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்திலும் தங்களது அதிரடியைக் கைவிடாத இந்த ஜோடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தனர். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஆனாலும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 54 ரன்களைச் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். இதனையடுத்து இணைந்த ராஜத் பட்டிதார் மற்றும் கேமரூன் க்ரீன் இணையும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இப்போட்டியில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வந்த ராஜத் பட்டிதார் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேரில் மிட்செலின் அபாரமான கேட்ச்சின் மூலம் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் 14 ரன்களுக்கும், கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களைக் குவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை