ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்!

Updated: Sun, Apr 07 2024 12:41 IST
ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரானது ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக தங்களது நான்காவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது விராட் கோலியின் சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 12 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் என 113 ரன்களைச் சேர்த்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சஹால் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஜோஸ் பட்லர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் தனது சதத்தைப் பதிவுசெய்ததுடன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த மைதானத்தில் 190 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தினால் நிச்சயம் எங்களால் வெற்றிபெற முடியும் என்று நினைத்தோம். அதேபோன்று மைதானத்தில் பனி இருந்ததால் சேசிங் சற்று சுலபமாகவும் இருக்கும் என்று கணித்தோம். மேலும் எங்களுடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை இந்த ஸ்கோர் நிச்சயம் எட்டக்கூடிய ஒன்று தான்.

அடுத்த போட்டிக்கு தயாராக எங்களுக்கு சில நாள்கள் அவகாசம் உள்ளது. மீண்டும் நாங்கள் ஓய்வெடுத்து பயிற்சி செய்து அடுத்த போட்டிக்கு தயாராக இந்த இடைவெளி எங்களுக்கு உதவும். இந்த போட்டியில் ஜோஸ் பட்லர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது எங்களுக்கும் சரி, அணிக்கும் சரி மகிழ்ச்சி அளித்துள்ளது. அவரைப் போன்ற ஒரு வீரர் பவர்பிளேவில் அடித்து ஆட தொடங்கினால் போது அதன்பின் களமிறங்கும் வீரர்களிடமிருந்தும் மிகச் சிறப்பான செயல்பாடு வெளிவரும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை