ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி!

Updated: Fri, May 10 2024 23:57 IST
ஐபிஎல் 2024: மோஹித், ரஷித் பந்துவீச்சில் வீழ்ந்தது சிஎஸ்கே; குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 59ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து தொடர்ச்சியாக பவுண்டரியும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் அரைசதம் கடக்க, கேப்டன் ஷுப்மன் கில் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களுக்கு மேல் தாண்டியது. அதன்பிறகும் அதிரடியைக் கைவிடாத இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். ஒரு கட்டத்திற்கு மேல் சிஸ்கே பந்துவீச்சாளர்கள் இந்த இணையை பிரிக்க முடியாமல் என்ன செய்வதேன புரியாமல் நின்றனர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளில் சதமடித்ததுடன், ஐபிஎல் தொடரில் தனது 4ஆவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். அவரைத்தொடர்ந்து தமிழக வீரர் சாய் சுதர்ஷனும் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 210 ரன்களைத் தாண்டியது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்ஷன் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 103 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஷிவம் தூபே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து 9 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்த நிலையில் ஷுப்மன் கில்லும் அதே ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய ஷாருக் கானும் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பறினார். இதனையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. 

அணியில் டார் ஆர்டர் வீரர்கள் ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த டேரில் மிட்செல் - மொயீன் அலி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி அண்யின் கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்தனர்.

இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியதால், சிஎஸ்கே அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருந்தது. அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 63 ரன்களிலும், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மொயீன் அலியும் என அடுத்தடுத்து மோஹித் சர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஷிவம் தூபே 21 ரன்களுக்கும், ரவ்வீந்திர ஜடேஜா 18 ரன்களுக்கும், மிட்செல் சாண்ட்னர் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழக்க, சிஎஸ்கேவின் தோல்வியும் உறுதியானது. 

இறுதியில் மகேந்திர சிங் தோனி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 26 ரன்களைச் சேர்த்த நிலையிலும், சிஎஸ்கே அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் மோஹித் சர்மா 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பிலும் நீடித்து வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை