ஐபிஎல் 2024: ஷுப்மன் கில் அதிரடியில் தப்பிய குஜராத்; பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு!

Updated: Thu, Apr 04 2024 21:15 IST
ஐபிஎல் 2024: ஷுப்மன் கில் அதிரடியில் தப்பிய குஜராத்; பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.

இதில் அதிரடியாக தொடங்கிய விருத்திமான் சஹா 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். பின் அதிரடியாக விளையாட முயற்சி செய்த கேன் வில்லியம்சன் 4 பவுண்டரிகளுடன் 26 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷன் முதல் பந்தில் இருந்தே பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

அவருக்கு துணையாக அதுவரை நிதானம் காத்த ஷுப்மன் கில்லும் பவுண்டரிகளை விளாச இருவரது பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 19 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 33 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷுப்மன் கில் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் கேப்டனாக ஷுப்மன் கில் அடிக்கும் முதல் அரைசதமும் இதுதான். 

பின்னர் தொடர்ந்து ஷுப்மன் கில் ஒருமுனையில் பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாச மறுபக்கம் களமிறங்கிய விஜய் சங்கர் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து மீண்டும் சொதப்பினார். அதன்பின் களமிறங்கிய ராகுல் திவேத்தியாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 89 ரன்களை மட்டுமே சேர்த்தார். அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திவேத்தியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 23 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களைக் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் காகிசோ ரபாடா 2 விக்கெட்டுகளையும், ஹர்ப்ரீத் பிரார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை