ஐபிஎல் 2024: ராஜஸ்தான் வெற்றியை தட்டிப்பறித்த புவி; ஒரு ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Thu, May 02 2024 23:32 IST
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் வெற்றியை தட்டிப்பறித்த புவி; ஒரு ரன் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் 17ஆவது சீசம் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 50ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பந்துவீச அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் பந்தை எதிர்கொள்ள தடுமாறி வந்தனர். இதில் அதிரடியாக விளையாட முயற்சி செய்துவந்த அபிஷேக் சர்மா 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆவேஷ் கான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சந்தீப் சர்மாவின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் காரணகாம சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்த நிதீஷ் ரெட்டி களமிறங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதுவரை நிதானம் காட்டிய டிராவிஸ் ஹெட்டும் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 58 ரன்கள் எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை ஆவேஷ் கான் கைப்பற்றி அசத்தினார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹென்ரிச் கிளசெனும் அதிரடி காட்ட, மறுபக்கம் தொடர்ந்து பவுண்டரியும், சிக்ஸர்களுமாக விளாசிய நிதீஷ் ரெட்டி 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதீஷ் ரெட்டி 3 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 76 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 42 ரன்களையும் சேர்த்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முயிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். ஆனால் அந்த அணிக்கு இன்றைய போட்டியில் எதிர்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் இரண்டு பந்துகளை தடுத்து விளையாடிய நிலையில், புவனேஷ்வர் குமாரின் அபாரமான இன்ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ரன்கள் ஏதுமின்றி பெவிலியன் திரும்பினார். 

இதனால் அந்த அணி ஒரு ரன்னிற்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரியான் பராக் இணை தொடக்கத்தில் நிதானம் காட்டி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30 பந்துகளிலும், ரியான் பராக் 31 பந்துகளிலும் என தங்கள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினர். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

அதன்பின் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 67 ரன்களைச் சேர்த்திருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்த நிலையில் ரியான் பராக்கும் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் இமாலய சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்ட கையோடு 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அச்சமயத்தில் 19ஆவது ஓவரின் முதல் பந்திலேயே துருவ் ஜூரெல் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் அந்த ஓவரின் அடுத்த 4 பந்துகளில் ரன்கள் எடுக்க தடுமாறிய ரோவ்மன் பாவெல், கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி மிரட்டினார். இதனால் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், சன்ரைசர்ஸ் அணி தரப்பில் கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். அதனை எதிர்கொண்ட ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் பந்தை சிங்கிள் எடுத்தார். அதன்பின் ஸ்டிரைக்கை எடுத்த ரோவ்மன் பாவேல், இரண்டாவது பந்தில் இரண்டு ரன்களையும், மூன்றாவது பந்தில் பவுண்டரியும், நான்காவது மற்றும் 5ஆவது பந்தில் மீண்டும் 2 ரன்களையும் சேர்க்க, ராஜஸ்தான் அணி வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ர பரபரப்பும் உச்சத்திற்கு எகிறியது. ஆனால் கடைசி பந்தில் ரோவ்மன் பாவேல் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன்மூலம் இறுதிவரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே சேர்த்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாச்த்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.  

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை