17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து எஸ்ஆர்எச் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Advertisement

இதில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினார். இதனால் 20 பந்துகளிலேயே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் அவருக்கு துணையாக அபிஷேக் சர்மாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முதல் 6 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 76 ரன்களைக் குவித்தது. அதன்பின்னும் தனது அதிரடியை கைவிடாத டிராவிஸ் ஹெட் சிக்ஸர்களை விளாசித் தள்ளி ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்களுக்கு பயத்தை உண்டாக்கினார். 

Advertisement

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில், 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 34 ரன்களைச் சேர்த்திருந்த அபிஷேக் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு அதிரடி நாயகன் ஹென்ரிச் கிளாசென் இப்போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 

பின் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 102 ரன்கள் எடுத்த நிலையில் டிரேவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் விதமாக ஹென்ரிச் கிளாசென் சிக்ஸர் மழை பொழிந்து 23 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். இதனால் நடப்பு ஐபிஎல் சீசனில் அதிகபட்ச ரன்களை குவித்த ஹைதராபாத் அணி தனது சொந்த சாதனையை இப்போட்டியில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களை விளாசி 67 ரன்கள் எடுத்திருந்த ஹென்ரிச் கிளாசென் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் மார்க்ரமுடன் இணைந்த அப்துல் சமதும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இதில் இருவரும் மாறிமாறி பவுண்டரிகளை விளாச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த அணி என்ற தங்களுடைய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அப்துல் சமத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 37 ரன்களையும், ஐடன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News