சக வீரர்கள் எனக்கு உத்வேகமளித்தனர் - வருண் சக்ரவர்த்தி!

Updated: Tue, Apr 30 2024 17:04 IST
சக வீரர்கள் எனக்கு உத்வேகமளித்தனர் - வருண் சக்ரவர்த்தி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 13 ரன்களுக்கும், அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷாய் ஹோப், அபிஷேக் போரால் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த கேப்டன் ரிஷப் பந்தும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

மேலும் நட்சத்திர வீரர்கள் அக்ஸர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குஷாக்ரா ஆகியோரும் சொற்ப ரன்க்ளுக்கு விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய குல்தீப் யாதவ் 35 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு ஃபினிஷிங்கையும் கொடுத்தார்.  இதன்மூலம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைக் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக  விளையாடிய பில் சால்ட் 68 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களையும் சேர்க்க, 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் போட்டி முடிவுக்கு பிறகு பேசிய வருண் சக்ரவர்த்தி, “இன்றைய போட்டியில் பிட்ச் கொஞ்சம் நின்று வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். இரண்டாவது இன்னிங்ஸில் அது கொஞ்சம் நன்றாக சுழன்றது. ரிஷப் பந்துக்கு எதிராக முதல் பந்திலேயே கேட்ச் தவறவிடப்பட்டது. மேலும் அதை மிகவும் நல்ல பந்து என்று நினைத்த நான் விரைவில் அவரை அவுட்டாக்கினேன். அதுவே வேறு ஏதாவது மைதானமாக இருந்திருந்தால் அந்த பந்து சிக்ஸருக்கு கூட போயிருக்கலாம். இப்போதெல்லாம் ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் சிறிய வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸின் விக்கெட்டை கைப்பற்றியது எனக்கு பிடித்த தருணமாக பார்க்கிறேன். பொதுவாக எனக்கு ஏதாவது சரியாக செல்லவில்லை என்றால் அங்கே உதவி செய்ய சுனில் நரைன் தயாராக இருப்பார். அதிக ரன்களை வாரி வழங்கிய கடந்த போட்டியை மறக்க வேண்டும். மேலும் சக வீரர்களும் எனக்கு உத்வேகமளித்தினர். அதேபோல் அந்த போட்டி முடிந்ததும் அபிஷேக் நாயர் மற்றும் ஷாருக்கான் போன்ற பலரும் என்னிடம் பேசி உத்வேகத்தை கொடுத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை